Monday, December 14, 2009

வெட்கம்

நாணத்தில் பூக்கள்,
சத்தம் இல்லாமல் முத்தம்
இட்டு சென்றது பட்டாம்பூச்சி!

Saturday, November 28, 2009

இறகுகள்

எழுத படிக்க தெரியாத
கோழியிடம் எத்தனை
எழுத்தாணிகள்??

Wednesday, September 9, 2009

விழிகள்

சற்று சிரித்து வையேன்
உன் கண்களின் மூலம்
ஒவ்வொரு முறை எனை
பார்க்கும் போதும் உன் கண்களில்
ஏதேதோ மாற்றம்
மறுமுறை பார்க்கும் போது
உன் கண்களில் அந்த
வினா குறியை காட்டாதே
நான் எதோ உனக்கு அந்நியன்
ஆனதாய் எனக்கு
ஓர் உணர்வு.

Monday, August 31, 2009

வெறுமை

பல முறை சந்தித்திருப்போம்.
இரவும் பகலும்
சமமாய் தோன்றும்.
சத்தம் பிடிக்காது,
சாப்பிட பிடிக்காது,
ஐம்புலன்களும் விழித்தபடி தூங்கும்,
உள்ளுக்குள்
இனம் புரியாமல்
விழித்திருக்கும் என்னவென்று
தெரியாத ஏதோ ஒன்று.
பந்தய குதிரையாய்
நினைவுகள் ஓடும்.
உறவுகளை வெறுத்து
உணர்வில் வாழ பிடிக்கும்.
மனசு கனத்து
மௌனம் மட்டுமே பேசும்.
நிஜம் சொல்லட்டுமா ?
வெளிச்சத்தில் தெரிவதெல்லாம்
உண்மையல்ல‌
"வெறுமை என்பதே நிஜம் "

ஓடி வா !

கை தட்டி அழைக்கும்
பஞ்சுமிட்டாய் பொம்மை,
விற்பவனின் பசியறிந்து.‌

Saturday, August 22, 2009

வட்டம்

தேடல் - சுகம்,
தொலைந்தது நாமாக
இல்லாதவரை.
தொலைவது - எளிது ,
தேடுவது நாமாக
இல்லாதவரை.
என்னையும் ஒரு நாள்
காணவில்லை.
தேடலில் தெரிந்தது
தொலைந்ததின் ஆழம்.
புரிந்தது இயற்கையின் நியதி,
மீள்வது தானே
அதன் ஒரு பகுதி.
மீண்டு வந்தேன் ,
நானகவே மீண்டும் வந்தேன்.

Monday, August 17, 2009

சிருஷ்டியின் பொம்மை

எந்த சிற்பியின் கைவண்ணம் ?
உன் உருவத்தில் இத்தனை
நளினமான வளைவுகள்?
நிச்சல் தெரியுமா உனக்கு?
சிறிது பெரிதாய் எத்தனை ரூபம்?
இடம் , வலமாய் திசைகள் கூட உண்டா?
அமைதியாய் இருந்தாலும் ,
உனக்குள் எத்தனை ஓங்காரம் ?
ஜனனத்தில் இருந்தாய் ,
மரணத்தில் இருந்தாய்,
இடைப்பட்ட காலத்தில்
எங்கு நீ சென்றாய் ?
பதில்கள் ஒலிப்பாயா
வலம்புரி சங்கே!!?

Saturday, August 8, 2009

மரப்பாச்சி பொம்மை

முழிச்ச கன்னு மூடாது,
கைய கால அசைக்காது,
கலர் கலரா கால் சட்டை,
தச்ச தையல் தெரியாது,
வாய் திறந்து பேசாது,
வசதி பாக்க தெரியாது,
உட்கார வச்ச இடம்
விட்டு துளி நகராது.

எல்லாம் தான் நீ செஞ்ச.
என்னத்த சாதிச்சென்னு,
ஏளனம் பன்னுது,
எதிர் வீட்டு குழந்தை கையில்
ஒய்யாரம அந்த மரப்பாச்சி பொம்மை!

" சும்மா "

அர்த்தம் இல்லாமல்
அதிகம் உபயோகிப்போம்.
என்னவென்று யாருக்கும்
தெரியாது.
"ஏன் சொன்னாய்"? கேள்வி கேட்டால்,
பதிலும், அதேதான் " சும்மா"

Saturday, August 1, 2009

பழைய காதலி

பார்வைகளும், ஸ்பரிசங்களும்,
கடிதங்களும், கவிதைகளும்,
ஊடல்களும்,கூடல்களும்,
அவள் நினைவில் இருக்கிறதா?
தெரியவில்லை.

கனவிலும், கற்பனையிலும் பறந்தவள்
இன்று குடும்ப கூட்டில்
கலந்து போனாள்.

கனவனாய் காதலிப்பதை விட
பழைய காதலனாய் விரும்புகிறேன்
அதிகமாய்
என்று யாராவது சொல்லுங்களேன்
என் பழைய காதலியும்
இன்று என் மனைவியும் ஆனவளிடம்...!!

Monday, July 27, 2009

வயோதிகம்

என் கவிதைகளுக்கு
முகவரியாய் இருந்தவள்.
இன்று அவள் முகத்தில் வரிகள்...

Sunday, July 19, 2009

கொலுசும் - புல்லாங்குழலும்

பல முறை அந்த ஆற்றை பேருந்தில் நான் கடந்து சென்றுள்ளேன்.சிறிய ஆறு,அது என் ஊர் எல்லையில் இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் அந்த ஆற்றை பேருந்தில் கடக்கும் போதும், அது ஏதோ ஒன்று சொல்ல வருவதை போன்ற படபடப்பு.

கேட்கத்தான் நேரம் இருக்காது எனக்கு.இந்த விடுமுறையில் அங்கு சென்று கரையோரமாய் அமர்ந்தேன்.


அந்த ஆறு கதை ஒன்று சொன்னது என்னிடம்.பழங்கதை அந்த ஊரில் நடந்த கதை.

ஆறு சொன்னது " ஊர் ஒர எல்லையில் நான் வாழ்கிறேன்.யாரும் என்னை போற்றுவதும் இல்லை.

தூற்றுவதும் இல்லை.

ஆனால் அவர்கள் வருவார்கள்.என் கரையோரமாய் அமர்வார்கள்.அதிகம் பேசுவதில்லை,பேசினாலும் கவிதையாகவே

இருக்கும்.பெரும்பாலும் கண்களே பேசும். அவர்கள் வருவதை நான் முன்னமே அறிவேன்.

அவள் வருவதை " கொலுசு " அறிவிக்கும்.

அவன் வருவதை "புல்லாங்குழல்"ஓசை அறிவிக்கும்.

அவன் அதிகமாய் புல்லாங்குழல் மீட்பதில்லை.ஆனால் வாசித்தால் அவளும் ,நானும் விரைவில் மயங்கி விடுவோம்.

அதிகமாய் வளர்பிறை நாட்களில் தான் வருவார்கள்.கரையோர மணல் மேட்டில் அமர்ந்து விளையாடுவர்.

அவள் கலகலவென சிரிப்பாள்.அது என் சலசலப்பையும் மீறி விடும். அவன் புல்லாங்குழலோசை திடீரென்று நின்று விடும்.

ஏன் என்று எட்டிப்பார்த்தால் அது அவள் கால் கொலுசுகளை வருடிக்கொண்டிருக்கும்.

அவர்களுக்கு தெரியாது என்னுள் இருக்கும் மீன் கூட்டம் அவர்களை ரசிப்பதை.

எப்போதாவது கவிதை கூறுவான் அவளிடம்.ஒரு முறை சொன்னான்

"நீ என்றோ பூக்கும் குறிஞ்சியல்ல! நீ என்றும் என் மனதில் பூக்கும் சூரியதாமரை.நம்மை யாரும் பிரிக்க முடியாது... நிரந்தரா, நாம் நிரந்தரமானவர்கள்!!"

எனக்குள் ஏக்கம் அவன் காதலியாய் பிறக்கவில்லையே, அவளை போல் கவிதை அவனிடம் கவிதை பெற.சில நாட்கள் அவர்களை காணவில்லை.மீண்டும் பௌர்னமிக்கு சில நாட்கள் இருக்கையில் அவர்கள்.அவன் "நம் கலப்பு மனத்தை இவ்வூரார் ஏற்கவில்லை என்றால்?" வினவினான்.வினா கேட்ட அவள் கண்களில் கண்ணிர்.என் தண்ணிரிலும் கலந்தது.அன்று என் அருகில் வந்து அமர்ந்திருந்தார்கள்.நான் அவர்களின் கால்களின் மேல் ஒடி, என்னை நானே கழுவி கொண்டேன்.


நிலவொளி அவர்களை பிரகாசித்தது.நிரந்தரா நிலவை போல நிறைந்திருந்தாள்.சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள்.அன்று நான் மூன்று நிலவுகளை நான் கண்டேன்.அவர்கள் என்னை என் கரையோரமணல் மேட்டில் அமர்ந்து என் மறுகரையோர தென்னை மரத்தில் இருந்த இரு பெண் புறாக்களை இரசித்தபடி. ஆனால் மரத்தின் அடியில் இருந்த மனித மிருகங்களை கவனிக்க தவறி விட்டனர்.


மறு நாள் இரவு அவர்கள் சந்தித்த போது அவர்களை சுற்றி மனித மிருகங்கள்.பல விவாதங்களுக்கு பிறகு செய்வதறியாது, பின்னி பினைந்தனர்.அதிர்ந்த மிருகங்கள அவர்கள் மீது எண்ணை ஊற்றி நெருப்பு வைத்தனர்.எதிர்ப்பே இல்லாமல் எரிய தொடங்கினர்.இரவில் என் கரையில் எரியும் முழு நிலவாய் அவர்கள்.அய்யோ!குளிர்மை இழந்து நான் கொதித்து போனேன்.எரிந்த அவர்களின் சாம்பலை ,என்னிடமே கரைத்தார்கள் "


கதை கூறி முடித்த ஆறு சலசலத்தது.

கதை கேட்ட என் கண்களில் கண்ணிர் துளிகள்

மேகம் கூட தன் பங்குக்கு மழையாய்...

அவனையும் , நிரந்தராவையும் என் நினைவில் நிறுத்தினேன்.

புனித ஆற்றில் நீராட ஆடைகளை களைந்து விட்டு

ஆற்றை நோக்கி நடந்து சென்றேன்.

Saturday, July 18, 2009

நீ - நான்

நீ பேசினாய்
நான் குரலானேன்!

நீ சுவாசித்தாய்
நான் காற்றானேன்!

நீ அழுதாய்
நான் கண்ணீரானேன்!

நீ பாடினாய்
நான் கவிதையானேன்!

ஆக "நீ" என்றும் "நீயாக"வே
இருக்கிறாய்
ஆனால் "நான்" தான் "நீயென்று"
இருக்கிறேன்.

Thursday, July 16, 2009

மரங்கொத்தி

மூங்கில் காட்டில்
மரங்கொத்திகளுக்கு என்ன வேலை?
புல்லாங்குழல் செய்கிறதா?!!

துளிகள்

தூரத்தில் பறந்து வந்த மேகம்
பெய்து கொண்டிருந்த மழையோடு நனைந்து,
அழகாக கலைந்து பெய்தது.
சாரலின் மோதல் தவிர்க்க
சற்றே கதவு திறந்து உள்ளே நின்றேன்.
அழுத்தமான காற்று....!
என்னையும் மீறி வீட்டின் உள்ளே.
கதவு ஜன்னல் படபடக்க
அங்கும் காற்றின் பிரவேசம்.

மழை நின்று முடிந்ததும்
மனநிறைவாய் வீட்டுக்கதவு அடைத்தேன்.
ஜன்னலில் வழிந்த நீர்த்துளிகள்,
மேஜையின் மேல்
அவளை பற்றி எழுதிய
கவிதைகளில் விழுந்திருந்தது.

ஆம்!
என் காதல் கவிதைகள்
நீலக்கண்ணீரோடு
நிறம் மாறி அழுது கொண்டிருந்தது...........

Monday, July 13, 2009

வேகம்!!?

நிலவை துரத்தி துரத்தி காதலித்தன,
நட்சத்திரங்கள். சில சமயம் பூமியில்
விழுவது கூட தெரியாமல்!!

பாலம்


மனிதர்களுக்கு உதவியாய்.
ஆற்றின் பயணத்தில்
இடைஞ்சலாய்.

Sunday, July 5, 2009

புதிர்

சுதந்திரமாய் நீ,
செயற்கை செடி கொடிகளுடன்
வண்ண உருண்டை கற்களுடனும்.
அங்கும் இங்கும்
உன் நன்பர்கள் கூட்டத்துடன்
நீ உல்லாசமாய் நீந்தியபடி.
கால தாமதம் இன்றி
உன் பசியறிந்து உணவுடன் நான்.
மின் விளக்கு ஒளியில்
மினுமினுப்பாய் நீ.
உன் கோட்டை மதில் சுவராய்
என் வீட்டுக்கண்ணாடி தொட்டி.
சில சமயம்
சாய்வு நாற்காலியில்
அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.
புதிராய் இருக்கும்!!
தங்க மீன் குட்டியே,
வேடிக்கை பார்ப்பது
நான் உன்னையா?
அல்லது, நீ என்னையா??!!

Sunday, June 28, 2009

தூரி

அடம் பிடித்து
அடி வாங்கி,
அழுது முகம் வீங்கி,
விரல் சூப்பி தூங்குவேன்...
அந்த
அழுக்கு புடவையிலும்
அம்மாவின் வாசனையோடு.

Tuesday, June 23, 2009

விட்டில் பூச்சி


சில மணி நேர
வாழ்க்கையில் சின்னதாய்
ஒரு காதல் கதை!
விளக்கோடு விளையாடும்
சின்ன விட்டில் பூச்சி,
உன் விளையாட்டு
விளக்கோடா?
உன் விதியோடா?!

Monday, June 22, 2009

அழகு தமிழ்

யார் சொன்னது கவிதைகள்
பெரியது என்று?
தமிழில் ஒவ்வொரு வார்த்தையும்
கவிதை தான் !
உதாரணங்கள் சில :
ஒய்யாரி
ஸ்பரிசம்
தொட்டச்சிணிங்கி
சோளகொல்லை பொம்மை
கண்ணாமூச்சி
தூரி
வலம்புரி சங்கு
கரிசல் காடு
மூக்கனங்கயிறு
விட்டில் பூச்சி
மரப்பாச்சி பொம்மை
....
இன்னும் பல !
(பிடித்த வார்த்தை சொன்னால் , அந்த தலைப்பில் கவிதை கிடைக்கும்)

Sunday, June 21, 2009

பறக்கும் ஒவியம்


ஆயிரம் வர்ணங்களிள்
இரண்டு பக்க தாளாய்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சி!

Friday, June 19, 2009

சில நிமிடங்கள்

கதவு அடைத்ததும்,

வாகனங்கள் அனைந்தன,

வெள்ளரிக்காய் விற்க்கும் சிறுவனின்

முகத்தில் ஆயிரம் வெளிச்சம்,

ரயில்வே கேட் அருகில்.

Wednesday, June 17, 2009

நினைவுகள்..

இன்றும் என்

தொலை தூர பேருந்து பயணத்தில்,

காற்றோடு வந்து மோதும் உன் நினைவுகள்....

துள்ளி நடந்த நம் பள்ளிக்கூட சாலை,

உன் மடிப்பு கலையாத சீருடை,

என்னை அழ வைத்த உன் நீண்ட விடுமுறை ,

நீ கடனாய் கொடுத்த பேனா,

உன்ணோடு நின்று பேசிய மஞ்சள் பூ மரத்தடி,

உன் விரல் விளையாடும் இரட்டை ஜடை,

என் கவிதை புத்தகத்தில்

நீ கொடுத்த புது ருபாய் நோட்டு ,

கடைசியில் உன் அன்புடன் கிடைத்த ஆட்டோகிராப்,

நாம் சேர்ந்து இருக்கும் சில புகைப்படங்கள் ..........

எதுவுமே மறக்கவில்லை ,

உன்னிடம் நான்

சொல்லாமல் மறைத்த

என் காதலையும் சேர்த்து....

எதுவுமே மறக்கவில்லை....

Friday, June 12, 2009

பசி


தெருவில் சிதறி கிடந்த நெல்மணி,
வேகமாய் வரும் லாரி,
ஆட்டுக்கு மரண பசி!!