Thursday, March 21, 2013

ஒரு கேள்வி??

எங்கோ நீ அழும்பொழுது 
என் விரல்கள் உன் 
விழி துடைக்க துடிக்கும்

நம்  தொலைவுகள் கூட கூட 
நம் இடைவெளி குறையும்

நீ இல்லாத வெறுமையில் 
என் பகல்கள் இருள் சூழும்

தழுவும் உன் கைகள் 
தேடி என் எண்ணம் 
அலைபாயும்

நழுவும் என் உயிர் 
இறுதியில் உன் பெயர் 
சொல்லியே மாளும் ..

ஓயாமல் ஒலிக்கும்
ஒரே கேள்வி
என்னையே கொல்லும்
பொழுதுகளில்
" என்னை நீயும்  நினைத்தாயா? "


Tuesday, March 12, 2013

புரியாத புதிர் இவள் ...

எதேச்சையாய் பார்த்த பொழுது
அவள் கூந்தல் கலைத்து 
ஆடை பரப்பி 
வேகமாய்  சென்றால் ...
இது ஒன்றும் புதிதல்ல 
ஆனால் அவள் தான் 
அனுதினமும் புதியவள் !
புரியாத புதிர் இவள் ...
எங்கிருந்து வந்தால் ? 
யாரோடு சென்றால் ?
இம்முறையும் அவளை
துரத்தியபடி பல
வினோத வர்ணகலசல்கள்
உடன் சில பறவை கூட்டமும் கூட
கடைசியாய் சென்ற பறவை
திரும்பி சொன்னது
துரத்தி செல்லும் நாங்கள்
இதுவரை அவளை
எட்டியதில்லை என்று!
ஒவ்வொரு முறையும்
மேகங்களுடன் கலந்தாலும் ...
அவள் மீதான
மோகம் குறைவதில்லை !
அவளை நீங்களும்
கண்டதுண்டா ??!

Tuesday, October 2, 2012

வீடு திரும்ப காத்திருக்கிறேன்...

ஆதி அந்தங்கள் 
புரியாமல் பிறந்து
சேர்ந்து பழகியது 
சொந்தம் என்றேன 

வாடி நின்றதும் 
ஓடும் பந்தங்கள் 
கோடி சேர்ந்ததும் 
கூடி வந்திடும் 

வேஷங்கள் தினம் 
காட்சிகள் வேறு 
சலிப்பாய் மனம் 
கடலலையாய் திரும்பும் 

நிதர்சனங்கள் 
நிழலாய் ஆனதும் 
நிழல்கள் மட்டுமே 
நிஜமென்றானது 

படைத்தவன் கடைக்கண் 
பார்வை பட்டதும் 
விடைபெற்றேன் 
இப்பொழுது 
வீடு திரும்ப காத்திருக்கிறேன் !

Thursday, March 8, 2012

பக்தி

மூத்த பெண்ணின் திருமணம்
மகனின் வேலை வாய்ப்பு
மனைவியின் மூட்டுவலி 
மளிகை கடை பாக்கி 
கோவில் தாக்கரின் கோபம்..........

பூசாரியின் எண்ணத்தில் 
பல சிந்தனைகளுடன் 
உதடுகள் மட்டும் 
மனப்பாடமாய் மந்திரம்
சொல்லி திரும்ப 
அவரிடம் ஆசிர்வாதம்
பெற்று பிரசாதம் பெற 
முண்டியடிக்கும் 
பக்த ஜனங்கள்

Saturday, August 6, 2011

பாடம்

வரிசையில் நடக்கும்
எறும்புகள் 
காத்திருந்து சாலை 
கடக்கும் கால்நடைகள் 
பகிர்ந்து உண்ணும் 
காகங்கள் 
பாடங்கள் பல 
நம் பாதையில் உண்டு
படிக்க தெரிந்தால் போதும் 

Thursday, July 28, 2011

தரிசனம்

பசியோடு அங்கும இங்கும் 
பார்த்தபடி வட்டமிட்டு 
வானத்தில் பறந்தது 
பருந்து -  
பூமியில் அதை 
பார்த்து கன்னத்தில் 
போட்டுகொண்டனர்
பக்தகோடிகள்-
இறை தேடும் பறவை 
இறைவனானது

பள்ளிக்கூடம்

 எட்டாத மேஜை 
இன்று என்னை அண்ணாந்து
பார்த்து வியந்தது
சாயம் போன கரும்பலகை 
தனக்கும் வயதானதை 
சாட்சியாய் சொன்னது 
என்றும் விரும்பி அமரும் 
முதல் வரிசை நாற்காலி 
என்னை ஏக்கமாய் பார்த்தது 
"தம்பி சௌக்கியமா?"
கணக்கு வாத்தியார் 
விசாரிப்பில் வியந்தேன்
அட இவருக்கு 
இப்படியும் பேச தெரியுமா?
என் முதல் கவிதையை 
ரசித்த தமிழாசிரியயை
நினைத்தபடி படித்த 
பள்ளிக்கூடம் விட்டு 
வெளிவந்தேன் 
மீண்டும் உள்ளே செல்ல 
ஆசை வந்தது
முதல் முறையாய் !!! 

Wednesday, July 27, 2011

பழைய கடிதம்

...........................
அம்மா பசியென்று  சொல்லி 
நான் கேட்டதில்லை  ,
அவளுகென்று எதையும் எடுத்து 
வைத்துகொண்டதாய் நினைவில்லை
அம்மா சிரித்து 
பார்த்ததை விட சிவந்த 
கண்களோடு பார்த்ததே அதிகம் 
அவளுக்கு நான் சேலை 
வாங்கி கொடுக்க 
ஆசை பட்டபொழுது 
எனக்கு வயதோ வசதியோ 
எட்டவில்லை 
இயலாதபோது தானே 
ஆசைகள் அதிகம் 
கடைசியில் ஒருநாள் 
உறங்கசெல்லும் முன் 
அம்மாவை இறுதியாய்
பார்த்தேன் ...
அதிகாலையில் யாரிடமும் 
சொல்லாமல் சென்றவள் 
திரும்பி வரவேயில்லை 
சில தினகளுக்கு பிறகு 
தகவல் வந்தது 
தனை தானே 
மாய்த்து கொண்டதாய்
.......... ........

வர்ணஜாலம்

எங்கும் எதிலும் 
பரவி இது இல்லாதது 
ஒன்றுமற்றது என்று 
சொல்லும்படி எங்கும் 
கலந்தது வர்ணங்கள் 
எண்ணங்களும் கூட 
வண்ணங்கள் பூசியே 
வெளிபடுகின்றன ..
படைத்தவன் தூரிகை 
எத்தனை கவித்துவமானது 
என்பதை மலை முகடுகளும்
பள்ளத்தாக்குகளும்
என்றும் நிறங்களில் சிரிக்கும் 
பூக்களும் கதை கதையாய் சொல்லும்!
முதல் முறை பிறந்த வண்ணம் 
எதுவென்று யோசித்தேன் ?
யாரேனும் தெரிந்தால் 
பதில் சொல்லுங்கள் 

Sunday, June 26, 2011

நான் எங்கிருக்கிறேன் ??

எங்கும் நிரம்பியிருக்கும் 
காற்று என் நாசிகளின் 
வழி நுழைந்து 
உடலில் பயனித்து 
வெளி வந்தது
இதயம் இரத்தம் 
சுத்திகரித்து தன் கடமையை 
ஓயாமல் செய்கிறது 
இன்ன பிற பாகங்கள் 
மூளையின் கட்டளையை 
வெறித்தனமாக நிறைவேற்றுகிறது 
எல்லாம் கவனிக்கிறேன் "நான்"
எங்கிருந்து கவனிக்கிறேன்??? 
என்பது தான் இன்னும் 
புரியவில்லை